0

இலங்கையிலே ஆதியில் இருந்து முருகப் பெருமானின் வேலாயுதத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் ஆலயங்கள் இரண்டுண்டு. ஒன்று வடக்கே தொண்டைமானாறு செல்வச் சந்நிதி. மற்றையது கிழக்கே மட்டக்களப்பு ஆரையம்பதி கந்தசுவாமி கோயில்.

மட்டக்களப்பின் தென் திசையில் கல்முனை வீதியில் நாலுமைல் தொலைவில் அமைந்துள்ள இப்பழம் பெரும் கிராமத்தின் பழைய பெயர் ஆரைப்பற்றை. இப்பெயருக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒளவையார் கம்பரைப் பார்த்து, ‘ஆரையடா சொன்னாய் அது’ என்று கூறி அவமானப்படுத்திய ஆரைப் பூண்டுகள் இங்குள்ள நீர் நிலைகளில் பற்றைபற்றையாக வளர்ந்து கிடந்தது ஒரு காரணம். நீரோடும் சிறு வாய்க்கால்களுக்கு ஆரைப்பற்றை என்றும் ஒரு பெயருண்டு. ‘ஆரையாம் பள்ளத்தூடே வாழினும் தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே’ என்ற அதி வீரராம பாண்டியனின் கூற்றாலும் இதை அறியலாம்.நீரோடும் கேணிகள், ஓடைகள், குளங்கள் பல தற்போதும் இங்குள்ளன. இனி இங்குள்ள கந்தசுவாமி கோயில் வரலாற்றைப் பற்றிச் சிந்திப்போம்.

இக்கோயில் இரண்டு வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புபட்டுள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் குணசிங்க மன்னன் மட்டக்களப்பை ஆண்டு வந்த காலத்தில், கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த உலக நாச்சி என்னும் இளவரசி மண்முனையை இராசதானியாகக் கொண்டு மண்முனைப் பிரதேசத்தை ஆண்டு வந்தாள். அவள்வரும் போது காசியிலிருந்து பெறப்பட்ட ஒருபடிகலிங்கத்தையும் கொண்டு வந்தாள். இங்கே சிகரகோபுரத்தோடு கூடிய கோயில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தீர்த்தமாடுவதற்காக ஒரு குளமும் வெட்டு வித்தாள். இவ்விடம் இப்போது கோயில் குளம் எனவும் சிகரம் இருந்த இடம் சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தைச் சுற்றி தன்னுடன் வந்த பிரதானிகள், போர் வீரர்கள், கோயில் தொழும்பர்கள், பல தொழில் துறை சார்ந்த மக்களையும் குடியேற்றி ஆண்டு வந்தாள்.

இது இவ்வாறிருக்க காத்தான்குடியின் வட கிழக்கே உள்ள தோணாவை அடுத்து வாழ்ந்து வந்த காத்தான் என்னும் வேடன், தான் வணங்கி வந்த முக்கோணக் கல்லையும் எடுத்துக் கொண்டு தெற்குப்புறமாக ஆரைப்பற்றையில் ஒரு அரச மர நிழலில் அக்கல்லை வைத்து வணங்கி வந்தான். அங்கு வாழ்ந்த மக்களும் அவனுக்கு உதவியாக இருந்தனர்.சில நூற்றாண்டுகளின் பின் உலக நாச்சி ஆண்டு வந்த மண்முனைப் பிரதேசத்தில் கொடிய வைசூரி நோய் பரவத் தொடங்கி ஏராளமான மக்கள் இறக்கத் தொடங்கினர். இதனால், பயந்த மக்கள் பல ஊர்களுக்கும் இடம்பெயர்ந்தனர். காத்தான், குடியிருந்த ஆரைப்பற்றையில் இந்நோய் பரவாமல் இருப்பதை அறிந்த ஆயிரக் கணக்கான மக்கள் ஆரைப்பற்றையில் குடியேற்றினர். காத்தான் கல் வைத்து வணங்கிய இடத்தில் மடாலய முறைப்படி கல்லால் ஒரு கோயில் கட்டினர். கதிகாமம், மண்டூர் கோயில்களின் வழிபாட்டு முறைப்படி திரை திறக்காமல் பூசைகள் நடைபெற்று வந்தன.

மலையாளத்திலிருந்து வந்த நம்பிமார்களே பூசைகளை நடத்தி வந்தனர். பின்னர் யாழ்ப்பாணம் கெருடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சின்னத்துரைக் குருக்கள் கோயிலைப் பொறுப்பேற்றதும் ஆகம முறைப்படி திரை திறந்து பூசைகளும் திருவிழாக்களும் விரதங்களும் நடைபெறத் தொடங்கின. தற்போது இக்கோயில் திரிதளத்தோடு கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு அழகான பெரிய கோயிலாக புதுப் பொலிவு பெற்றுக் காட்சியளிக்கிறது. இங்கு திருவிழாக்களைச் செய்யும் பிரிவினர்களை பாகைக்காரர்கள் என அழைப்பார்கள்.


ஆரையம்பதி மு.கணபதிப்பிள்ளை (முனா கானா) அவா்களால் 2009 இல் தினகரன் பத்திரிகையில் எமுதப்பட்ட கட்டுரை

Post a Comment

 
Top